மக்கள் சபைகளில் இருந்து பங்கேற்பு மற்றும் கலந்தாய்வு ஜனநாயகத்தை நோக்கி… -இத்தலைப்பிலான கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன

“அதிகாரத்தை தியவன்னாவைக்கு வெளியே கொண்டுவருதல்!” – எனும் தொனிப்பொருளே 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தேர்ச்சையாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் பிரதான முழக்கமாக அமைந்திருந்தது. எமது அரசியல் அமைப்பை மறுசீரமைக்கவும், ஜனநாயகத்தை மேலும் வலுவாக்கவும், தேர்தல் மற்றும் உத்தியோகப்பூர்வ அதிகாரம் ஆகிய இரு முறைகளின் மூலமும் நியமிக்கப்படும் அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்புக்கூறச் செய்வது, அதற்கான அரசியல் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பொதுமக்களின் நேரடிப் பங்களிப்பை உறுதிசெய்வது போன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே, ‘மக்கள் சபை’ தொடர்பான சிந்தனைகள் மேலேழுந்தன. அன்றிலிருந்து இச்சிந்தனை தொடர்பில், குறிப்பாக அதன் எண்ணக்கருக்கள், அத்தகைய மக்கள் சபைகளின் கட்டமைப்பு, அவற்றின் செயல்திறன் என்பன பற்றிப் பல்வேறு வாதவிவாதங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வந்தன. அவ்வாறே, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்டு, நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டமும் அதையொட்டி நிகழ்ந்த, தற்போதும் இடம் பெற்றுவருகின்ற எதிர்ப்பு இயக்கங்களும் நசுக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழமைவில், இத்தகையதோர் இடையீட்டின் தேவை மிகவும் வலுவானதாக உணரப்படுகிறது. உண்மையில், இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம், பொதுமக்களின் பிரச்சினைகளைக் கலந்துரையாடுவதற்கும், அவற்றைச் செவிமடுப்பதற்கும், அவை தொடர்பாக அமைதியான முறையில் கலந்துரையாடவும் விவாதிக்கவும்கூடிய அமைப்பு/கள் எவையும் இல்லாமல் இருப்பது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளமை தெரியவருகிறது. இப்பின்னணியில், இந்தக் கலந்துரையாடலுக்குப் பங்களிக்கவும், இலங்கை மற்றும் பிற நாடுகளின் பங்கேற்பு மற்றும் கலந்தாய்வு ஜனநாயகம் தொடர்பாக நிகழ்ந்துள்ள பரிசோதனை முயற்சிகள் பற்றிப் புரிந்துகொள்வதற்கும், ‘மக்கள் சபை’ எனும் எண்ணக்கரு தொடர்பில் காலங்காலமாகத் தொடர்ந்துவரும் கல்விப்புலக் கதையாடல்கள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றினூடே சமகாலத்துக்கேற்றதொரு கலந்துரையாடலினை வடிவமைப்பதற்காகவும், பொலிட்டி (Polity) இதழானது மேற்படி தலைப்பு சார்ந்து உங்களிடம் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றது.

ஆட்சி முறைமையினுள் பொதுமக்கள் பங்கேற்பு என்ற சிந்தனை பண்டைய கிரேக்க நகர அரசு காலமுதல் நிலவி வருகிறது. அது தொடர்பான சமீபத்திய விவாதம் 1960 களில் இருந்தே தொடங்கியது. அங்கு குடிமக்களுக்கும் அரசுக்குமிடையிலே நம்பிக்கை மற்றும் அறநேர்மை தொடர்பில் எழுந்த முரண்பாட்டின் பின்னணியில், அங்கு நிலவிய ஊழல், வெளிப்படைத்தன்மை குறைந்தமை, மக்களின் கோரிக்கைகளுக்கும் தேவைகளுக்கும் பொறுப்புணர்வுடன் பதிலளிக்கும் தன்மை குறைந்தமை போன்ற காரணங்களால் அரசு நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்த  ஆழ்ந்த விரக்தியின் விளைவாகவே இத்தகைய கதையாடலொன்று மேலெழுந்தது.  அவ்வகையில், இந்த உரையாடல்களின் விளைவாகப் பல்வேறு விதமான அமைப்புசார் பொறிமுறைகள் இது தொடர்பில் களமிறங்கியுள்ளமைக்கு, இந்தியாவில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள், பிரேசிலின் பங்கேற்பு வரவுசெலவுத் திட்டச் செயன்முறை என்பன சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறு, பங்கேற்றல் மூலம் தீர்மானமெடுக்கும் அனுபவங்கள் இலங்கைக்கும் உண்டு. அவை பெரும்பாலும் நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலமைந்த அனுபவங்களாகும். கல் ஒயா மற்றும் மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக உருவாக்கப்பட்ட விவசாயச் சங்கங்கள், உள்ளூராட்சி மன்றங்களால் ஒருங்கிணைக்கப்படும் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டங்கள், வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீட்டு உடைமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டு மறுசீரமைப்புத் திட்டங்கள் என்பவற்றை இவற்றுக்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இத்தகைய அனுபவங்கள், அவற்றோடு தொடர்புடைய வகையில் அமைந்த புலமைத்துவ அறிவு வளங்கள் என்பவற்றை ஒருங்கிணைத்து ஆராய்வதன் மூலம் காத்திரமானதொரு பங்களிப்பினை வழங்குவதோடு, நாம் நிறையக் கற்றுக்கொள்ளவும் கூடியதாக இருக்கும் என்பது எங்களின் நம்பிக்கை.

இந்தத் தொகுதிக்காகப் பின்வரும் கருப்பொருள்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுரைகள் அவற்றுக்குள் மட்டுமாய் வரையறுக்கப்பட்டிருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை:

  • ஜனநாயக அரசியலை மேலும் வலுவாக்கவும் மக்கள் பங்கேற்புடன் கூடியதாக ஆக்கவும் கூடிய நிறுவன அமைப்புகள் யாவை?
  • அத்தகைய நிறுவனப் பொறிமுறையினூடே மிக வெற்றிகரமாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் எவை? அவற்றில் வெற்றியடையக் கூடியவை எவை, தோல்வியடையக் கூடியவை எவை ?
  • இத்தகைய அனுபவத்தைச் சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு முன்நிபந்தனைகள் எவையேனும் உள்ளனவா? அவ்வாறு இருப்பின், அவை எவை?
  • மக்கள் சபை தொடர்பில், இலங்கையைக் களமாகக் கொண்ட கலந்துரையாடலில் அந்தக் கருத்தாக்கம் எவ்வாறு நிலைபெற்றுள்ளது?
  • வர்க்கங்கள், சாதிகள், இனங்கள், பாலினம், பால்நிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் சமூகத்தில் உருவாகியுள்ள அதிகாரப் படிநிலைகள் இச்சபைகளில் மறுவுருவாக்கம் செய்யப்படாமல் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது? நமது சமூகங்களில் பலவீனர்களாகவும் விளிம்புநிலையாளர்களாகவும் உள்ளவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இந்தச் சபைகள் எவ்வாறு கட்டமைக்கப்படல் வேண்டும்?
  • பங்கேற்பு ஜனநாயகம் தொடர்பில் ஏனைய நாடுகளில் நிலவிவரும் ஒப்பியல் அனுபவங்கள் எத்தகையவை?

உங்கள் பரிந்துரைகள் மற்றும் கட்டுரைகளைப் பின்வரும் தொகுப்பாசிரியர்களின் மின்மடல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்: polity@ssalanka.org

Share This